கல்லூரி மாணவியை கடத்திய பிரபல ரவுடி… மகனின் ஒருதலை காதலுக்கு உதவிய குடும்பம்… தாய் மற்றும் உறவுக்கார பெண் கைது..!

Author: Babu Lakshmanan
10 January 2023, 11:50 am

கன்னியாகுமரி அருகே பிரபல ரவுடியால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை ஒன்றரை மாதத்திற்கு பிறகு போலீசார் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் விஜிமோன். பிரபல குற்ற சரித்திர பதிவேடு ரவுடியான இவருக்கு, குளச்சல், இரணியல் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், அதே ஊரை சேர்ந்த லெக்மிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் 17 வயதான கல்லூரி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

கல்லூரி மாணவி காதலை ஏற்று கொள்ளாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி கல்லூரி முடிந்து மாணவி வீடு திரும்பி கொண்டிருந்தபோது, லெக்மிபுரம் பகுதியில் வைத்து மாணவியை வழிமறித்த விஜிமோன், அவரை தனது தாய் விஜி, உறவுக்கார பெண் சகாயராணி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றுள்ளார்.

இந்த நிலையில், மாணவியின் தந்தை ரவிச்சந்திரன் கடத்தல் சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அனைத்து மகளிர் போலீசார், ரவுடி விஜிமோன் உள்பட 3 பேரை, கண்டால் தெரியும் நபர்கள் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, போலீசார் தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த வியாழக்கிழமை தலைமை செயலகத்திற்கு சென்ற மாணவியின் தந்தை ரவிச்சந்திரன், முதலமைச்சர் அலுவலக தனிப்பிரிவில் தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி புகாரளித்தார்.

இதனையடுத்து, கல்லூரி மாணவியை உடனடியாக கண்டுபிடித்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஒன்றரை மாதத்திற்கு பின் மாணவியை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ரவுடியின் தாயார் மற்றும் உறவுக்கார பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு, தலைமறைவாக இருக்கும் ரவுடியை 2-தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 811

    0

    0