பேஸ்புக் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது… குமரியை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
Author: Babu Lakshmanan8 September 2023, 9:46 pm
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் ரஞ்சித் (27) கொத்தனார் வேலை பார்க்கும் இவருக்கும், ஆலங்கோடு பகுதியை சேர்ந்த பிஇ இன்ஜினியரிங் பட்டதாரியான ஷைனி (27) என்பவருக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
ஷைனி நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வந்த நிலையில், ஷைனியும் பிரவின் ரஞ்சித்தும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் பிரவின் ரஞ்சித்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், குடிபழக்கத்திற்கு அடிமையான பிரவின் ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால், ஷைனி அவருடனான தொடர்பை மெல்ல மெல்ல குறைக்க தொடங்கியதோடு, முகநூல் பக்கத்தையும் பிளாக் செய்து தொடர்பை முற்றிலும் முறித்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து காதலி ஷைனியை தொடர்பு கொண்டும் காதலை அவர் தொடராததால், ஆத்திரமடைந்த பிரவின் ரஞ்சித் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ஷைனியைப் பின் தொடர்ந்து சென்று, அவரை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் வயிற்றில் குத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஷைனியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், கத்தி குத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஷைனி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார், முகநூல் காதலியை கத்தியால் குத்தி தப்பியோடி தலைமறைவாக இருந்த பிரவின் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.