கஞ்சா போதையில் அராஜகம்… சினை ஆட்டை வெட்டிக் கொன்ற கொடூரனை கைது செய்த போலீசார்..!!
Author: Babu Lakshmanan13 July 2023, 2:35 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சினை ஆடு ஒன்றை சரமாரி வெட்டி கொன்ற கொடூரனை இரணியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே செட்டியார்மடம் வலியவிளை காலணி பகுதியை சேர்ந்தவர் அபீஸ் (21). இளைஞரான இவர் கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாக சுற்றி திரிந்து வருவதாக கூறப்படுகிறது.
அடிக்கடி கஞ்சா போதை தலைக்கேறும் போது, வீடு வீடாக சென்று வம்பிழுத்து தகராறில் ஈடுபட்டு, அந்த காலணி மக்களை கதற விடும் இவருக்கு, குளச்சல் காவல்நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், இரணியல் காவல்நிலையத்தில் ஊர் மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட இரண்டு புகார்கள் மனு ரசீதோடு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், அதி மிஞ்சிய கஞ்சா போதையில் காலணி பகுதிக்கு வந்த அபீஸ், கையில் சிறிய கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு, அந்த வழியாக வருவோர் போவோரிடம் வம்பிழுத்துள்ளார். பின்னர், அந்த காலணி பகுதியில் உள்ள மூன்று பஞ்சாயத்து குடிநீர் பைப்புகளை அடித்து நொறுக்கியதோடு, வீடுகளில் வைத்திருந்த செடி தொட்டிகள் கேட்டுகளையும் அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பகுதியில் அனு என்ற பெண் புதிதாக வீடு கட்ட தொடங்கியுள்ள நிலையி,ல் கட்டுமானத்திற்கான கம்பிகளை தூக்கி வீசி வேலை ஆட்களையும் விரட்டியடித்துள்ளார். அருகில் உள்ள முருகன் என்பவரின் வீட்டின் கேட்டில் கல்வீசி தாக்கியும் உள்ளார். இதை முருகன் தட்டி கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அபீஸ் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கு இருந்த வெட்டுக்கத்தியை எடுத்து வந்து முருகனை வெட்ட விரட்டியுள்ளார்.
இதில் முருகன் தப்பியோடிய நிலையில், ஆத்திரம் அடங்காத அபீஸ் அவரது வீட்டில் இருந்த ப்ரிஜ் ஐ அடித்து நொறுக்கியதோடு, வீட்டின் முன் நின்ற சினை ஆடு ஒன்றை வெட்டு கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொன்றுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்து அபீஸ் சென்ற நிலையில் முருகன் மற்றும் அனு சம்பவம் குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் அபீஸ் மீது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து பயன் தரும் பிராணியை கொடூரமாக கொல்லுதல், போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவனை, நேற்றிரவு கைது செய்த இரணியல் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.