‘போலீஸை லெட்டர் கொடுக்க சொல்லுங்க’.. என் பிள்ளைகளை நானே கண்டுபிடிச்சுக்கிறேன் ; 25 நாட்களாக நடக்கும் தாயின் பாசப் போராட்டம்!
Author: Babu Lakshmanan30 நவம்பர் 2023, 8:17 மணி
மாயமான மகன்களை இருபத்தைந்து நாட்கள் கடந்த பின்பும் கண்டுபிடித்து தரவில்லை என குற்றஞ்சாட்டியும், தங்களால் முடியாது என்றால் எழுதி தர கேட்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தாய் ஒருவர் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் ராஜா. மாற்றுத்திறனாளியான இவருக்கு ராஜம் என்ற மனைவியும், மூன்று மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜா தன் குடும்பத்துடன் மனைவியின் சொந்த ஊரான குளச்சல் அருகே கோடி முனை பகுதியில் குடி பெயர்ந்தார்.
இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி ராஜாவின் மனைவி ராஜம் கோடிமுனையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார். அப்போது, அவரது 16 வயது மகன் ரித்திக் ரோஷன் மற்றும் 9 வயது மகன் ஆதவன் ஆகியோர் குளச்சல் பேருந்து நிலையத்தில் தாயாரை பஸ் ஏற்றி விடுவதற்காக தாயாருடன் சென்றனர். தாயார் அங்கிருந்து புறப்பட்ட பிறகு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
ஆனால், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் ராஜா அதிர்ச்சி அடைந்த நிலையில், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதோடு, கோடிமுனை செல்லும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, குளச்சல் கடற்கரை பகுதியில் சென்ற இரு சிறுவர்களும் அங்கிருந்து திரும்பி வந்ததற்கான பதிவு இல்லை.
இதனால் கடலில் தவறி விழுந்து இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. மாயமான தனது இரண்டு மகன்களை மீட்டு தர கேட்டு தாயார் ராஜம், குளச்சல் காவல் நிலையம் முதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து மனு அளித்தும், இதுவரை இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு இடையே மதுரை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். போலீஸ் தரப்பில், இரு சிறுவர்களும் கடலில் விழுந்து கற்களுக்கு இடையே சிக்கி இருக்கலாம் என கூறியதாக தெரிகிறது.
அப்படி என்றால் இரு சிறுவர்களின் சடலங்களை மீட்டு தர வேண்டும் என தாயார் கோரிக்கை வைத்த நிலையில், இதுவரை போலீசார் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தாயார் குற்றம் சாட்டியுள்ளார். கற்களுக்கு இடையே சிக்கி இருந்தால் கடலோர காவல் படையின் உதவியோடு மீட்டு தருவதாக போலீஸ் கூறிய நிலையில், 25 நாட்கள் கடந்த பின்பும், இதுவரை மீட்டு தராததால் தங்களால் முடியாது என போலீசார் எழுத்துப்பூர்வமாக அளிக்க கேட்டு சிறுவர்களின் தாயார் ராஜம் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே, அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியதோடு, மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று கோரிக்கையை முன் வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் தன் போராட்டத்தை கைவிட்ட ராஜம் அங்கிருந்து அதிகாரிகளை சந்திக்க சென்றார்.
மகன்கள் மாயமான துயரத்தில் தாயார் ஒவ்வொரு அலுவலக வாசலிலும் மனுக்களோடு காத்திருந்தும் இதுவரை தனது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாததால் துயரத்தோடு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தோரை பரிதாபப்பட வைத்தது.
0
0