தொடரும் திருட்டால் பீதியில் பொதுமக்கள்… கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை..!!
Author: Babu Lakshmanan5 October 2022, 8:59 pm
ஸ்ரீபெரும்புதூரில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி. கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விமலா நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கணேஷ் (45). இவருக்கு பார்வதி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணேஷ் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். கணேஷ் வீட்டின் அருகில் குடியிருப்பவர் நாகராஜ். இன்று காலையில் எழுந்து தன் வீட்டின் கதவை திறக்கும் பொழுது வெளியே யாரோ கதவை தாழிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
தன் மனைவிக்கு போன் செய்து யாரோ வீட்டின் கதவை வெளியே தாழிட்டு விட்டு சென்று விட்டனர். ஆகவே அருகில் உள்ளவர்களுக்கு போன் செய்து திறக்க சொல்லியுள்ளார். உடனே மேல் வீட்டில் இருப்பவர் கதவை திறந்து உள்ளார்.
வீட்டுக்கு வெளியே வந்து பைக் உள்ளதா என்று நாகராஜ் பார்த்துள்ளார். பைக் இருந்துள்ளது.
சரி, பக்கத்து வீட்டை பார்க்கலாம் என்று நாகராஜ் தன் அருகில் உள்ள கணேஷ் வீட்டை பார்த்த பொழுது கதவு திறந்துள்ளது. மிக அருகில் சென்று பார்த்த பொழுது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே அதிர்ந்து போன நாகராஜ் கணேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த கணேஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகை 1.5 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் வீராசாமி பிள்ளை தெருவில் 35 சவரன் நகையும், அதேபோல் செப்டம்பர் மாதம் ஆயக்குளத்தூரில் 35 சவரன் நகையும் கொள்ளை போன சூழலில், தற்போது 17 பவுன் நகை கொள்ளை போய் உள்ளது. ஆகவே, தொடர் திருட்டால் ஸ்ரீபெரும்புதூர் மக்கள் தொடர் பீதியில் உள்ளனர். மேலும், இதுவரை எந்த கொள்ளையர்களையும் கைது செய்ய முடியாமல், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் திணறி வருகின்றனர்.