எங்க ஏரியாவுக்கு ஏன் நல்லது செய்ய மாட்டிறீங்க..? திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற வார்டு பெண் உறுப்பினரின் சகோதரர்…!!
Author: Babu Lakshmanan2 March 2022, 11:50 am
காஞ்சிபுரம் அருகே தங்களின் வார்டுக்கு நல்லது செய்ய மறுப்பதாகக் கூறி திமுக பிரமுகரை 26 வயது இளைஞர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் (53). திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா (45). கோனேரிக்குப்பம் ஊராட்சி தலைவர். இவர்களுக்கு 3 குழந்தைகள். கடந்த ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இருந்து திமுக கட்சியில் இணைந்தார். அவருக்கு மாவட்ட பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 25 ந்தேதி காலை உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு தன் பைக்கில் சேகர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டருகே தலையாரி தெரு வந்தபோது வார்டு உறுப்பினர் கௌசல்யா என்பவரின் தம்பி இளவரசன் சேகரை வழிமறித்து கேள்விகளை எழுப்பினார்.
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் என் வார்டு மக்களுக்கு பணம் கொடுக்காமல் உறுதிமொழி கொடுத்து ஜெயித்து வந்துள்ளோம். என் வார்டு மக்களுக்கு நல்லது செய்ய ஏன் மறுக்கிறீர்கள்?
- என் சகோதரி கௌசல்யாவுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும்
- என்னுடைய வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் , மின் விளக்கு போன்ற வேலை செய்துள்ளேன். பஞ்சாயத்தில் இருந்து இதுவரை பணம் வரவில்லையே ஏன்?
- எங்கள் குடும்ப சொத்து ஒன்றுக்காக உங்களை அணுகினோம். உங்கள் குடும்ப பிரச்சனையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என எங்களை கழற்றி விட்டு விட்டீர்களே ஏன்?
- இடிக்கப்பட்ட தொலைக்காட்சி அறை இருந்த இடத்தை நாங்கள் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி அளிக்க மறுக்கின்றீர்களே ஏன்?
போன்ற கேள்விகளை சேகரிடம் இளவரசன் கேட்டதால் சேகர் மழுப்பலாகவும், வேண்டா வெறுப்பாகவும் பதிலளித்துள்ளார். அதனால் கோபம் அடைந்த இளவரசன் தான் வைத்திருந்த கத்தியால் சேகரின் முகத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சேகரை கழுத்திலும்,கையிலும், தலையிலும் பலம் கொண்டு இளவரசன் ஓங்கி வெட்டினார். கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சேகரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேற்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் சேகர் உயிரிழந்தார். அப்பகுதி மக்களிடமும் காவல்துறையினரின் கண்களிலும் சிக்காமல் இளவரசன் தலைமறைவானார்.
இதுசம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு ) வெங்கடேசன் தலைமையில் ஒரு தனிப்படையும், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார் ,முரளி தலைமையில் மாவட்ட தனிப்படையும் என இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்த குற்றவாளியான இளவரசனை தனிப்படை பிடித்து கைது செய்தது. மேலும் நடந்த சம்பவத்தை மறைத்ததற்காக கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த சக்தி (எ) சதீஷ்குமார் (23 ), அஜித் (25 ), ரங்கா (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான சேகர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 7 வழக்குகள் இருந்தது. சரித்திரப் பதிவு குற்றவாளியான இவருடைய தகவல்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.