‘தண்ணீர் தேங்கியே இருக்கு… சீக்கிரம் அப்புறப்படுத்துங்க’ : மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்..!
Author: Babu Lakshmanan12 November 2022, 10:03 am
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பல்லவர் மேடு அருந்ததி பாளையம் என்ற பகுதியில் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் தேங்கும் மழை தண்ணீரை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.