மகளுக்கு விஷம் கொடுத்து கொலை : மனைவியுடன் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. காரணத்தை கேட்டு உறவினர்கள் கண்ணீர்..!!
Author: Babu Lakshmanan2 June 2022, 5:42 pm
கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் மகளை கொலை செய்துவிட்டு மனைவியுடன் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சி ஒற்றைத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (51). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரோகிணி (45), மகள் அர்ச்சனா (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் தற்போது புதிய வீடு கட்டியுள்ளனர். இதனால் ரமேசுக்கு அதிக கடன் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால், ரமேஷ் அவரது மனைவி ரோகிணி ஆகியோர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர். வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது என தெரியாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
கணவன், மனைவி தற்கொலை செய்துவிட்டால் மகள் அனாதையாகி விடுவாளே என கருதிய அவர்கள், அவளையும் தங்களுடன் அழைத்து செல்ல திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து, நேற்றிரவு அர்ச்சனாவின் கை, கால்களை கட்டிவிட்டு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், ரமேசும், ரோகிணியும் வீட்டின் மற்றொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தனர். இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக ரமேஷ் மற்றும் ரோகிணி செல்போன்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஆனால், அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. இதனால், மேலும் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு காரர்கள் ரமேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் ஒரே சேலையில் ரமேஷ், ரோகிணி பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி அர்ச்சனாவை தேடிய போது மற்றொரு அறையில் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்ட் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மகளை கொன்று விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்திருக்கிலாம் என போலீசார் சந்தேகித்தனர். 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் ரமேஷ் இந்த விபரீத முடிவை எடுத்தாரா..? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.