கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிய ஆம்னி பஸ் – டெம்போ… 2 பேர் பரிதாப பலி..!!
Author: Babu Lakshmanan2 May 2022, 2:32 pm
கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே ஆம்னி பஸ், டெம்போ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் இருந்து காய்கறி ஏற்றிய ஒரு டெம்போ நேற்று நள்ளிரவு ஆரல்வாய்மொழி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் டிரைவர் உள்பட 4 பேர் இருந்தனர். அந்த டெம்போ குமரி – நெல்லை எல்லையான முப்பந்தல் அருகே வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ்சும், டெம்போவும் நேருக்கு நேர் மோதின. இதில் டெம்போ அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த காஞ்சாம்புரம் கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40), வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காஞ்சாம்புரம் கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (40) பரிதாபமாக இறந்தார். டெம்போ மீது மோதிய ஆம்னி பஸ் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. நல்லவேளையாக டிரான்பார்மர் சேதம் அடையவில்லை.
இதனால் பஸ்சில் இந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் பஸ் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.