தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கிடைத்த பெருமை எடப்பாடியாரையேச் சாரும் : குமரியில் நடந்த அதிமுக போராட்டத்தின் போது தளவாய் சுந்தரம் பேச்சு!!
Author: Babu Lakshmanan5 April 2022, 1:22 pm
கன்னியாகுமரி : தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் தந்த பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சாரும் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதை கண்டித்தும், அம்மா கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திய திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் நடந்த கண்டன போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமை வகித்தார்.
இதில் கழக அமைப்பு செயலாளர் கே.டி. பச்சைமால், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அசோகன் ஜான் தங்கம், மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் அமைச்சர் சேகர்பாபு சொத்து வரி உயர்வு குறித்து கருத்துக் கூறும் போது நோய் தீர கசப்பான மருந்து சில நேரங்களில் தேவைப்படுகிறது அது போல தான் இந்த சொத்து வரி உயர்வு என்று கூறினார்.
அவர் அதிமுகவில் இருந்து சென்றார் என்பதை நிரூபித்துவிட்டார். தற்போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி கிடைத்தது என்று சொன்னால் அதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததுதான்.
எனவே அந்த பெருமையெல்லாம் அதிமுகவிற்கும், அவருக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் மட்டுமே சாரும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பிரச்சனைக்காக மட்டும்தான் டெல்லி சென்றாரே, தவிர வேறு யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை,என்று கூறினார்.