இருசக்கர வாகனம் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan11 October 2022, 4:15 pm
கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணி (70). இவர் மண்வெட்டி தயாரித்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் வில்லுக்குறி பகுதியில் விற்பனையை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்புவதற்காக வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, குமாரகோயில் பகுதியை சேர்ந்த ஜெனிஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மணி மீது வேகமாக மோதியது. இதில் மணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், இருசக்கர வாகனமும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதனால், தீப்பொறி கிளம்பிய நிலையில், ஜெனிஷ் ஐ இழுத்தபடி பல அடி தூரம் சென்று பைக் நின்றது.
இதில், ஜெனிஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.