வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு குறி… தோப்பு வீட்டில் நடந்த பயங்கரம்… நகைக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை… 5 தனிப்படைகள் அமைப்பு..!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 9:23 pm

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே தாய் மற்றும் மகளை கொலை செய்து விட்டு 21 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், மனைவி பவுலின்மேரி அவரது தாயார் திரேசம்மாள் உடன் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி உறவினர் ஒருவரிடம் செல்போணில் பேசி விட்டு தூங்க சென்றதாக தெரிகிறது. இன்று காலை அவர்கள் மீண்டும் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்ட போது பதிலளிக்காத நிலையில், உறவினர்கள் இன்று மதியம் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றி காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, தாயும் மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக அவர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றது தெரிய வந்துள்ளது.

பின்னர், வீட்டில் இருந்த அயண் பாக்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு, பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி சங்கிலி மற்றும் தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி என 16சவரன் தங்க நகைகளை அறுத்துள்ளனர்.

அவர்களின் கைகளில் இருந்த மோதிரத்தையோ, காதணிகளையோ எடுக்காமல் வீட்டில் இருந்த பீரோக்களையும் உடைத்து நகைகளை திருட முயற்சி செய்யாமல், வீட்டிற்கு வெளியே வந்து மீண்டும் கதவை பூட்டி தப்பியோடியுள்ளனர். இதனால், 70 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக தெரிகிறது. ஆனால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டம் போட்டு தாயும் மகளையும் கொலை செய்தார்களா..? இல்லை வேறேதும் காரணமா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபர்களை பிடிக்க குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் 5 தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்களை மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Irunga Bai dialogue trending சோசியல் மீடியாவை அலறவிட்ட”இருங்க பாய்”…குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானா…!