குமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் இந்தாண்டுக்குள் சீரமைப்பு : ஆய்வுக்குப் பிறகு சட்டப்பேரவை மனுக்குழு தலைவர் தகவல்

Author: Babu Lakshmanan
17 May 2022, 5:53 pm

கன்னியாகுமரி : குமரியில் கனமழையால் ஏற்பட்ட உடைப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தரமாக சீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மனுக்குழு தலைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில்குமார், பிரபாகர ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று குமரி மாவட்டத்துக்கு வந்தனர்.

குழுவினருக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை சட்டமன்ற மனுக்கள் குழுவினர் நேரில் சந்தித்து பேசினர்.

பின்னர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை சட்டசபை மனுக்கள் குழு வினர் பெற்றனர். இதனையடுத்து, தேரூர், புதுகுளம், சுசீந்திரம் குளம், உடையப்பன்குடியிருப்பு, பணிக்கன் குடியிருப்பு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, சட்டசபை மனுக்கள் குழு தலைவர் கோவி செழியன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்டர் மூலம் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது. தற்போது நடந்துள்ள ஆய்வின்போது கன்னியாகுமரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்துள்ளார். இதே போல் ஊராட்சி மன்ற தலைவரும் மனு அளித்துள்ளார். 

அதில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், குளங்களை தூர்வார வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் இந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் இருந்து சட்டசபை மனுக்கள் குழுவிற்கு இதுவரை 238 மனுக்கள் வந்து உள்ளது. இதில் 120 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி தற்போது ஆய்வின் போது பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் போது ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். 

இதுதொடர்பாக கலெக்டரிடம் ஆலோசித்து பொதுப்பணித்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, எம்.எல்.ஏ.க்கள். தளவாய்சுந்தரம்,எம்.ஆர்.காந்தி,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!