ஓட்டலில் மாணவியிடம் சில்மிஷம்… காரில் தப்பியோடிய மதபோதகர்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திப் பிடித்த மாணவர்கள்..!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 5:02 pm

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த மாணவியிடம் சில்மிஷம் காட்டிய மதபோதகரை மாணவர்கள் பைக்கில் துரத்திச் சென்று விரட்டி பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் சிலர் வகுப்புகள் முடிந்த பிறகு, அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றனர். மாணவிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மதபோதகர் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து மற்றொரு இருக்கைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றும் அந்த மதபோதகர் சேட்டைகளில் ஈடுபட்டதால் மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்தனர். மாணவர்கள் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்தனர். அப்போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

காரில் தப்பிச் சென்ற அந்த வாலிபரை மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து துரத்தினார்கள். சினிமா பட பாணியில் இந்த சேசிங் சம்பவம் நடந்தது.

சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று பார்வதிபுரம் பகுதியில் வைத்து காரை மடக்கிப் பிடித்ததோடு காரின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் ஏராளமான பொது மக்களும் திரண்டனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை சமாதானம் செய்தனர். அப்போது காரில் இருந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த வாலிபரையும், மாணவர்களையும் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த வாலிபர் காரில் வேகமாக புறப்பட்டு சென்றார். வாலிபரை தனியாக அனுப்பி வைத்ததற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவிகளிடம் சில்மிஷம் செய்து விட்டு தப்பி சென்ற வாலிபரை, மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று பிடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1496

    0

    0