குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு… நண்பனாக மாறி ஆச்சர்யம்.. செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்!!

Author: Babu Lakshmanan
31 January 2022, 6:05 pm

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு ஒன்று பொதுமக்களிடம் நட்பு பாராட்டி வரும் சம்பவம் நெகிழச் செய்துள்ளது.

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக ஒரு கருங்குரங்கு குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. அந்த குரங்கு மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்ததாக தெரிகிறது.

வழக்கமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் குரங்குகள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, மரங்களில் உள்ள காய், கனிகளை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும். அவற்றை விரட்ட முயன்றால் கடிக்க விரட்டுவதும் என பல விதங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும்.

ஆனால், இந்த கருங்குரங்கு அவற்றுக்கு நேர்மாறாக பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் அன்பாக பழகி வருகிறது. அந்த பகுதி மக்களும் பழங்கள், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி அந்த குரங்கிடம் பாசம் காட்டி வருகின்றனர்.

பொதுமக்களோடு அன்பாக பழகும் இந்த விசித்திர கருங்குரங்கு யாராவது ‘செல்பி’ எடுக்க சென்றால் அசராமல் போஸ் கொடுக்கிறது. இதனால், குரங்குடன் ‘செல்பி’ எடுத்து அந்த பகுதி வாலிபர்களும், சிறுவர்களும் குதூகலம் அடைகிறார்கள்.

சமீபகாலமாக அந்த பகுதி சிறுவர், சிறுமிகளின் உற்ற நண்பனாக மாறிய கருங்குரங்கு அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து உலா வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…