‘உல்லாசமாக இருக்கலாம் வர்ரீயா’… தொந்தரவு செய்ததை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை ; ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 11:06 am

கன்னியாகுமரி ; கேலி கிண்டலை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி போட்டு சித்ரவதை செய்த ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் கலா (35). கணவரை இழந்த இவர் தனது 9 வயது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய கலா, தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு கலா மேல்புறம் வழியாக செல்லும் போது, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு சிலர் தினசரி கலாவை கேலி கிண்டல் செய்தும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் பயந்து போன கலா, தனது பாதுகாப்பிறக்காக மிளகாய்ப் பொடியும் , கத்தியும் கைவசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல் கலா தனது மசாஜ் சென்டருக்கு போவதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் மீண்டும் கலாவை பார்த்து கிண்டல் செய்தபடி, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலா தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்றுள்ளார்.

உடனே அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒரு சிலர் கலாவை பலவந்தமாக பிடித்து, கை, கால்களை துணியால் கட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த கலா ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கலா அவருக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பெண்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், ஒரு பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!