பத்மநாபபுரம் அரண்மனைக்குள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி மறுப்பு : கதவுகளை மூடி கேரள போலீசார் கெடுபிடி!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2022, 5:39 pm
கன்னியாகுமரி : பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த குமரி கலெக்டரை அரண்மனைக்குள் அனுமதிக்காமல் கதவுகளை மூடி கெடுபிடி காண்பித்த கேரளா போலீசாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழக இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, மற்றும் அரண்மனை கட்டுப்பாட்டில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி சுவாமி விக்ரகங்கள் ,உடைவாள் மாற்றி பாரம்பரிய முறைப்படி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த இரு மாநில அரசு நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குமரி மாவட்ட கலெக்டர் மா. அரவிந்த் கேரளா அரசு சார்பில் தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோர் அரண்மனைக்கு வந்தனர்.
பின்னர் அரண்மனைக்குள் உப்பரிகை மாளிகையில் நடைபெற்ற உடைவாள் மாற்றும் நிகழ்ச்சிக்கு இரு மாநில அமைச்சர்களும் அரண்மனைக்குள் சென்ற நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரண்மனைக்குள் செல்ல வந்த குமரி மாவட்ட கலெக்டர் மா.அரவிந்தை தடுத்து நிறுத்திய கேரளா போலிசார் அவரை உள்ளே விடாமல் கெடுபிடி காட்டி அரண்மனை கதவுகளை மூடினர்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவிய நிலையில் அங்கு வந்த தமிழக அதிகாரிகள் கேரளா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலெக்டரை அழைத்து கொண்டு அரண்மனைக்குள் சென்றனர்
இதனையடுத்து உடைவாள் மாற்றும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், குமரி கலெக்டரிடம் கேரளா போலீசார் கெடுபிடி காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.