திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டியடிப்பு.. வெளியான வீடியோ.. குமரியில் பரபரப்பு!
Author: Hariharasudhan21 October 2024, 11:27 am
குமரி மாவட்டம், ஞாலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆய்வுக்குச் சென்ற பிரமுகர்களை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம், ஞாலம் ஊராட்சி பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதி ஆகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, இந்த கிராமங்களில் மின்சார சுடுகாடு திட்டம் கொண்டு வர அரசுத் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த குமரி மாவட்ட அதிகாரிகள் தரப்பில் இடம் தேர்வு செய்யச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு உள்ள ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகாரிகள் திரும்பி வந்துள்ளனர்.
இதனால் ஊர் மக்கள் கடந்த மாதம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். அப்போது, அவர்கள் தங்கள் வாக்காளர் அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் ஒப்படைத்து விட்டு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் , குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் தலைமையில், அப்பகுதியின் திமுக ஊராட்சி மன்றத் தலைவர்களும், மின் மயானம் அமைக்க திட்டமிட்டு இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தனியாக இருந்த மூதாட்டி.. மிளகாய்பொடி தூவி கொலை.. திருப்பூரில் பரபரப்பு!
அப்போதும் அங்குள்ள ஊர் மக்கள், ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், திமுகவைச் சேர்ந்த தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத் தலைவர் பிராங்கிளின் மற்றும் ஞாலம் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ் ஆகிய இரண்டு பேரைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, அவர்களை அங்கிருந்து ஊர் மக்கள் விரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . அப்போது அவருடன் வந்த திமுக மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோரையும் அங்கிருந்து பொதுமக்கள் விரட்டியுள்ளனர்.
இதனால் மேயர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு திமுக பிரமுகர்கள், மேயர் ஆகியோரை கிராமத்தினர் விரட்டியனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.