அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் குடும்பத்துடன் கிரிவலம்… வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!!
Author: Babu Lakshmanan28 November 2023, 4:13 pm
திருவண்ணாமலை ; கிரிவலத்தின் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் குடும்பத்துடன் கிரிவலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கடந்த 17ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 26ம் தேதி அதிகாலை கோவிலினுள் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.
மலையையே சிவனாகவும், சிவனையே மலையாகவும் கருதும் திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி, தீபம் உள்ளிட்ட பல்வேறு நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
குறிப்பாக, கிரிவலத்தின் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு இரண்டாம் நாளும், அதே போல் பொங்கல் திருவிழாவின் போது திருவூடல் முடித்து சிவனடியார் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்கவும், ஆண்டிற்கு இரண்டு முறை அண்ணாமலையார் கிரிவலம் வருவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபம் 26ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. இரண்டாம் நாளில் நேற்று அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
இதனைத்தொடர்ந்து, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், துர்க்கை அம்மன், அடிஅண்ணாமலை கோவிலில் உள்ள அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் ஆகிய சுவாமிகள் ஒன்றும் பின் ஒன்றாக கிரிவலம் வந்தனர். அப்பொழுது உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வழிநெடுகிலும், சாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.