கார்த்திகை தீப விளக்கின் விலை கிடுகிடு உயர்வு.. மண் விளக்குகள் செய்யும் பணி தீவிரம்.. வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்!!!
Author: Babu Lakshmanan1 December 2022, 6:08 pm
மூலப்பொருள் விலை அதிகரிப்பால் விளக்கின் விலையும் உயர்ந்துள்ளதாக கரூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாநகரம் அண்ணாவளைவு அருகே உள்ள ஆலமர தெருவில் கார்த்திகை தீபத்திற்கான விளக்கு, பொங்கல் பண்டிகைக்கான மண்பானை செய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வகித்து வருகின்றனர். வருகின்ற 6 தேதி கார்த்திகை தீப நாளாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் இல்லங்களில் மண் விளக்குகளால், விளக்கு வைத்து தெய்வங்களை வணங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத்திற்கு தேவையான விளக்கு தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. தயாரிக்கும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் வணிக வியாபாரிகள் நேரடியாக தேவைக்கேற்ப வாங்கி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மண் விளக்கு உற்பத்தியாளர் கூறுகையில், “கார்த்திகை தீப நாளில் விளக்கு வைத்தால் உடலில் உள்ள நோய்கள் விலகும். வீடு சுபக்சமாக இருக்கும். ஐந்து தலைமுறையாக தொழில் செய்து வருகிறோம். இந்தாண்டு விளக்கு செய்வதற்கான மூலப்பொருளான மண், மணல், தேங்காய் மட்டை கிடைப்பதற்கு சிரமமாகியுள்ளது. வெளியே வாங்கி செய்யும் நிலையில் தான் உள்ளது. உற்பத்தியானது கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு குறைவாக தான் உள்ளது. விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
குத்துவிளக்கு, ஐந்து முகவிளக்கு, லட்சுமி, விநாயகர், சரஸ்வதி விளக்கு மற்றும் சாதாரண விளக்கு என பல வகையான மண் விளக்குகள் உள்ளது. ஒரு ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. தற்போது தொழில் நஷ்டமாக தான் இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல பணி செய்து வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.