செல்போன் டார்ச் மூலம் கண்ணை பரிசோதித்த செவிலியர்… கலைஞர் நூற்றாண்டு மருத்துவ முகாமில் அவலம்..!!
Author: Babu Lakshmanan21 July 2023, 7:40 pm
திண்டுக்கல்லில் ஆத்தூர் தாலுகாவில் மருத்துவர்கள் இன்றி நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு மருத்துவ முகாமில் செல்போன் டார்ச் மூலம் கண்ணை பரிசோதித்த செவிலியர்களால் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து செவிலியர்கள் கலந்து கொண்டனர் . இந்த முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவம் பார்ப்பதற்கு போதிய டார்ச் லைட் இல்லாததால் முதியவர்களுக்கு செல்போன் டார்ச் லைட் அடித்து கண் பரிசோதனை செய்தனர். சாதாரணமாக ஸ்மார்ட் போன் டார்ச் லைட்டை பார்க்க கூடாது என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், அதே டார்ச்சை வைத்து கண்ணை பரிசோதிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மருத்துவர்கள் இன்றி அனுபவம் குறைந்த செவிலியர்களை வைத்து மருத்துவ முகாம் நடத்துவதால் மக்களின் உடல்நிலை மேலும் பாதிப்பு ஏற்படும். எனவே, இது மாதிரி மருத்துவ முகாம்களை கவனமாக நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.