கருணாநிதி நினைவு தினம்… அமைதி பேரணியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் திடீர் மரணம்…!!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2023, 4:00 pm
கருணாநிதி நினைவு தினம்… அமைதி பேரணியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் திடீர் மரணம்…!!!
இன்று தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டகலை வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு , எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியில் திரளான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில், சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான (கவுன்சிலர்) சண்முகம் கலந்துகொண்டார்.
பேரணி செல்லும் வழியில் சண்முகம் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்று பின்னர், அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
ஆனால் சண்முகத்தை பரிசோதித்த மருத்துவர் சண்முகம் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கலைஞர் நினைவு தின பேரணியில் நடைபெற்ற இந்த சோக நிகழ்வு திமுகவினரை வருத்தமடைய செய்துள்ளது.
இந்த செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கவுன்சிலர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்து கொள்வதாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிக்கை வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.