முடிவுக்கு வந்தது கருப்பனின் ஆட்டம் : மயக்க ஊசி செலுத்திய யானை வேறு வனப்பகுதிக்கு மாற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 5:55 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்வதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாக வருகின்றன.

குறிப்பாக தாளவாடி மற்றும் ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களை சேதம் செய்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக தாளவாடி ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதம் செய்தும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வந்தது.

இந்த யானையைப் பிடிக்க முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையைப் பிடிக்க வனத்துறையினர் மூன்று முறை முயற்சி செய்தும் கருப்பன் யானை பிடிபடாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் ஆகிய கும்கி யானைகள் நேற்று வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்த நிலையில் இன்று காலை தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள மகராஜன் புறம் என்ற பகுதியில் உள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட கருப்பன் யானையை தற்போது லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் சென்று கொண்டுவிட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த கருப்பன் யானையை பிடிக்க தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் செய்து வந்த நிலையில் தற்போது கருப்பன் யானை பிடிபட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…