தொடர் கனமழையால் அமராவதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
Author: Babu Lakshmanan14 November 2022, 1:17 pm
கரூர் : கரூர் அருகே அமராவதி ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலையில் அமராவதி ஆறு உருவாகிறது. அங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக கரூரை வந்தடைந்து, திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் இந்த நதி இணைகிறது.
இந்த நதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிகளவு தண்ணீர் ஓடியதால், ஆற்றின் குறுக்கே அணைப்பாளையத்தில் 1876-இல் தடுப்பணை கட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அரவக்குறிச்சி அடுத்த அணைப்பாளையம் தடுப்பணையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தற்போது அமராவதி ஆற்றில் 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் போல் காட்சி அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த அணையை சுற்றிலும் கருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்து வனம் போன்று காட்சியளிக்கிறது.