வெளிய போயா முதல்ல… மனு அளிக்க வந்த முதியவரை ஒருமையில் பேசி அவமதித்த கரூர் ஆட்சியர் : வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 7:34 pm
கரூர் : சாலை வசதி வேண்டி மன கொடுக்க வந்தவர்களை வெளியில் போயா என ஆத்திரத்தின் உச்சத்தில் ஆட்சியர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அளவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம், வாரம் மனுக்கள் வாங்குவதினால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கடந்த சில வருடங்களுக்கு முன்பே மனுநீதி என்கின்ற புதிய வெப்சைட்டினை ஒன்றினை அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் பதிந்தார்.
இதனையடுத்து கொரோனா காலம் என்பதினால் இன்று வரை மக்கள் தங்களது மனுக்களை கலெக்டர் அலுவலகத்தின் வெளியே உள்ள டப்பாவில் போட்டு விட்டு சென்றனர். ஆனால், வெகுநாள் கழித்து இன்றுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை அளித்துச் சென்றனர். அப்போது, கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருத்தூர் பஞ்சாயத்து விஸ்வநாதபுரம் கிராமம் உள்ளது.
சுமார் 200 ஆண்டு காலமாக அங்கு வசிக்கும் அந்த கிராம மக்களுக்கு சாலை வசதி, தெரு விளக்குகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை, பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வருகை தந்தனர். அப்போது, அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது, கைகளில் டிஜிட்டல் பேனர் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து டிஜிட்டல் பேனர்களை சுருட்டி எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர்.
அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் பள்ளிக் குழந்தைகள் ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டனர். பள்ளி குழந்தைகள் அனுமதிக்க வேண்டாம் என கூறியதை அடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்பு, அவர்களுடன் வந்த கல்லூரி மாணவி மற்றும் முதியவரை மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதி தந்தனர். அப்போது மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர், எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை பள்ளிக்குச் செல்ல விடாமல் இங்கு அழைத்து வரக் கூடாது என்றும், மேலும், கொரோனா காலம் என்பதினால், குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என்றதோடு, இது போன்று நடந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், கல்லூரி மாணவி உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் கூட்டரங்கை விட்டு வெளியேறும்படி சத்தம்போட்டார். மாணவியுடன் இருந்த முதியவரை பார்த்து வெளியில் போயா என ஆத்திரத்தில் ஆட்சியர் ஒருமையாக பேசி, வழக்கு போட்டுவிடுவோம் எச்சரித்தார்.
இந்த சம்பவத்தினால்., அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டரங்கை விட்டு வெளியேறி செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் தான் பள்ளிக் குழந்தைகள் தானாக இங்கு வந்தனர் என தெரிவித்தனர்.
எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றால், நாங்கள் இனிமேல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல மாட்டோம் என்றதோடு, எங்கள் மீது வழக்கு பதிவு செய்து விடுவோம் என்றும் எச்சரித்து அனுப்பினார். இந்த செயல், தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது