‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 5:25 pm

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். பொதுப் பிரச்சினை, தனி நபர் பிரச்சினை தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்துச் செல்வது வழக்கம்.

இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க பலரும் வருகை தந்த நிலையில், முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து அவர் வைத்திருந்த பையில் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட மணியகவுண்டன் பட்டி கிராமத்தை சார்ந்த துரை என்பதும், தனது மகளை தாக்க வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக காவல் நிலையம் சென்றால் தன்னை ஆய்வாளர் மிரட்டுவதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க வந்ததாக அந்த முதியவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி தீக்குளிக்க முயல்பவர்களை கட்டுப்படுத்தும் விதமாக, பிரதான நுழைவு வாயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்ட நிலையில் டீசல் கேனுடன் உள்ளே வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 377

    0

    0