வேலை நேரத்தில் புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள்.. வரி செலுத்த வந்தவர்கள் அதிருப்தி ; வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan20 May 2023, 12:34 pm
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் வேலை நேரத்தில் வரி வசூல் விட்டுவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி போன்றவை நிலுவையில் உள்ளது. இதனை கட்டச் சொல்லி ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வசூல் செய்து வருகின்றனர். மேலும், முன் கூட்டியே வரி கட்டுபவர்களுக்கு 5% வரி டிஸ்கவுண்ட் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகம் வந்த ஊழியர்கள் தங்கள் பணியினை மேற்கொண்டு வந்தனர். அலுவலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் வரி வசூல் செய்யும் கவுண்டர்களில் இருக்கும் 3 பெண் ஊழியர்களும், ஒரு ஆண் ஊழியரும் வேலை நேரத்தில் வரி வசூல் செய்வதை நிறுத்தி விட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
வரி செலுத்த வந்தவர்கள் காத்திருந்து பணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தவர்கள் அவர்களை அழைத்து வரி செலுத்தி விட்டுச் சென்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஊரெல்லாம் வரி கட்டச் சொல்லி வீதி, வீதி ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும், வீடு வீடாக அலுவலர்கள் வரி கட்டச் சொல்லி அறிவுறுத்தி வரும் நிலையில் வரி வசூல் மையத்தில் ஊழியர்கள் வேலை நேரத்தில் புடவையை பார்த்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.