‘படியில நின்னு அடிச்சுக்கிறாளுக’…அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களை ஒருமையில் திட்டிய நடத்துநர்…!!
Author: Babu Lakshmanan23 September 2023, 10:57 am
கரூரில் நகரப் பேருந்தில் இடம் பிடிக்க ஏறிய பெண்களை பேருந்து நடத்துநர் ஒருமயில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்து கொடுமுடியிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கோவை – கரூர் சாலையில் வந்து கரூர் பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, திருக்காம்புலியூர் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண்கள், கொடுமுடி செல்ல இருக்கை பிடித்து அமர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது, முன்பக்கமாக அதிகமாக பெண்கள் ஏறிக் கொண்டு அவர்கள் நடத்துனருக்கு கூட வழி விடாமல் நின்று கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தை விட்டு இறங்கி இடம்பிடிக்க ஏறிய பெண்கள் கீழே இறங்கினால் தான் பேருந்தை எடுப்போம் எனக் கூறி நின்று கொண்டனர்.
அப்போது அங்கு வந்த போக்குவரத்து பெண் காவலர் பேருந்தை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தியதை அடுத்து, பேருந்து நிலையத்திற்குப் பேருந்தை ஓட்டிச் சென்றனர்.
பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் பேருந்தை எடுக்குமாறு கூறிய போது இறங்க மறுக்கும் பெண்களை பார்த்து மரியாதை இல்லாமல் ஒருமையில் நடத்துனர் பேசியுள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.