அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு… தனிச்செயலரை நியமித்து கரூர் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி…!!

Author: Babu Lakshmanan
6 மே 2022, 9:08 காலை
Quick Share

கரூர் அருகே வேடிச்சிபாளையம் கிராமத்தில் செயல்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதை அடுத்து அரசு தனிசெயலாளர் மேற்பார்வையில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேடிச்சிபாளையத்தில் ராஜா உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள அப்பள்ளியில் 80 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சுஜாதா என்பவர் அரசு விதிகளுக்கு முரணாக தலைமை ஆசிரியராக கடந்த 2014 ஆண்டு பள்ளி தாளாளரால் நியமனம் செய்யப்பட்டார்.

நியமனம் செய்யப்பட்ட சுஜாதாவிற்கு அதற்கான ஊதியமும் வழங்கப்பட்டது. இவர் அரசு விதிகளுக்கு முரணாக நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கையை சென்னை தொடக்க கல்வி இயக்குனரிடம் வழங்கப்பட்டது.

மாநில தணிக்கை துறையின் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்ட சுஜாதா அரசு விதிகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டதாகவும், அவருக்கு முறைகேடாக ஊதிய உயர்வும், விதிகளுக்கு மாறாக மருத்துவ விடுப்பும் வழங்கப்பட்டதாக தெரிய வந்தது.

இதனை அடுத்து அரசாணை விதி எண் 101ன் படி அரசு நேரடி மானியத்தில் அப்பள்ளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின் பெயரில் தனி அலுவலராக கரூர் வட்டார கல்வி அலுவலர் (பொறுப்பு) அசோகன் நியமனம் செய்யப்பட்டார்.

நேற்று பள்ளி வந்த அவர், அரசின் நேரடி மானியத்தில் கொண்டு வரப்பட்டதற்கான கடிதத்தை அப்பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதனை அடுத்து அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளை அழைத்து இனி தாளாளர் மேற்பார்வையில் இப்பள்ளி செயல்படாது என்றும், அரசின் நேரடி மானியத்தில் நடைபெறும் என்றும், எந்த அலுவலக தொடர்பாக இருந்தாலும் தன்னிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார்.

மேலும், ஆசிரியைகளுக்கு வழங்கப்படும் பணப்பயன்கள் அனைத்தும் அரசின் மூலம் நேரடியாக உங்களுக்கு வழங்கப்படும் என்றார். சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இப்பள்ளி தற்போது முறைகேடு புகாரில் சிக்கி அரசின் நேரடி மானியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 2215

    3

    0