‘எந்த வேலை செய்தாலும் லஞ்சம்’… அரசு அதிகாரியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. கரூரில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan9 August 2023, 2:34 pm
கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரி கார்த்தி மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சித் துறை துணைப் பொறியாளர் கார்த்திக் என்பவர் 01-04-2014 முதல் 31-03-2021 காலகட்டத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்கண்காணிப்பாளர் நடராஜன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கார்த்திக், அவரது மனைவி கவிதா மற்றும் கார்த்திக் தாயார் காளியம்மாள் ஆகிய மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விசாரணை செய்யப்பட்ட காலக் கட்டத்தில் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட தொகை மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 1,49, 91,062 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்த்திக் மனைவி கவிதா மற்றும் தாயார் காளியம்மாள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 66 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள மூலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக்கின் மாமனார் ராமலிங்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.