2வது மனைவி நடத்தையின் மீது சந்தேகம்.. குளக்கரையில் கணவருடன் ஏற்பட்ட சண்டை… 4 நாட்களுக்குப் பிறகு அம்பலமான சோகம்..!!
Author: Babu Lakshmanan4 July 2022, 10:23 am
கரூர் : 2வது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியை அடித்து கொலை செய்து 50 அடி ஆழ கிணற்றில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய சரகம் பகுதிக்குட்பட்ட பள்ளசங்கனூர் கிராமத்தை சார்ந்தவர் தனபால் (வயது 34). விவசாய கூலி தொழிலாளியான இவர், மாட்டு வண்டி வைத்து அப்பகுதிகளில் உள்ள குளத்தில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு மேனகா (24) என்ற மனைவி உள்ள நிலையில், மேனகாவின் அக்கா அம்பிகா (30)வும் வசித்து வந்துள்ளார்.
அம்பிகாவின் கணவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்னரே இறந்த நிலையில், அம்பிகா, மேனகா, தனபால் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அம்பிகா மீது காதல் கொண்ட தனபால், தங்கை மேனகாவின் சம்மதத்துடன், அம்பிகாவினை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாக்காம்பாறையில் உள்ள அவரது அம்மா வீட்டில் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இரவு நேரத்தில் மாட்டு வண்டியினை குளத்தில் மணல் அள்ள ஒவ்வொரு நாளும், ஒரு மனைவியை அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28 ம் தேதி இரவு 2 வது மனைவி அம்பிகாவை அழைத்துக் கொண்டு குளத்தில் மணல் அள்ள தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளான். அப்போது, அம்பிகாவிற்கும், தனபாலுக்கும் சண்டை வந்துள்ளது. 2வது மனைவியின் மீது சந்தேகமடைந்த தனபால் அவரை குச்சியால் தாக்கியுள்ளான்.
அப்போது, அம்பிகா மயக்கமடைந்து படுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த தனபால், அம்பிகாவை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டான். மீண்டும் அடுத்த நாள் காலை 9 மணியளவில் சென்று பார்த்த போது அம்பிகா உயிரிழந்ததை பார்த்துள்ளான். அதிர்ச்சியடைந்த தனபால், அம்பிகாவின் உடலை சாக்கில் கட்டி அருகில் இருந்த சண்முகம் என்பவரின் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் இறங்கி குழி தோண்டி உடலை புதைத்து விட்டு தலைமறைவானான்.
மூத்த மகள் அம்பிகா காணாமல் போனதை அறிந்த அவரது அம்மா காளியம்மாள் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது மருமகனையும் காணவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக வெள்ளியணை போலீசார் தனபாலை தேடிய நிலையில், வெள்ளியணை பகுதியில் சுற்றி திரிந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தெற்கு மேட்டுப்பட்டியில் தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் புதைத்திருப்பதை ஒப்புக் கொண்டான். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குற்றவாளி தனபாலை போலீசார் அழைத்து வந்து புதைத்த இடத்தை காண்பிக்கச் செய்தனர்.
அப்போது, சனிக்கிழமை இரவு நேரம் ஆனதால், ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை சார்ந்த மருத்துவர்கள், வருவாய் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் முன்னிலையில் தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி பாதி அழுகிய நிலையில் இருந்த அம்பிகாவின் உடலை தோண்டி எடுத்தனர்.
பின்பு, தயாராக இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தனபால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். மனைவியை கொலை செய்து 50 அடி ஆழ கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் கொடுத்த புகாரினை கருப்பொருளாக வைத்து காணாமல் போன பெண்ணின் உடல், 4 தினங்களுக்கு பின்னர் அதுவும் 50 அடி ஆழ கிணற்றில் குழி தோண்டி புதைக்கப்பட்ட உடல், மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதோடு, ஏற்கனவே அடித்துக் கொன்ற மனைவியினை உடல் தெரியாமல் இருக்க தான் புதைத்ததாக ஒப்புகொண்ட இரண்டாவது கணவரின் செயல் கரூர் அருகே பெரும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.