போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கஞ்சா வியாபாரி… 5 கூட்டாளிகளுடன் கைது ; 44 கிலோ கஞ்சா பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
4 செப்டம்பர் 2022, 2:14 மணி
Quick Share

கரூர் ; கரூரில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரி அவனது 5 கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, ஒரு லாரி, 2 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகரை சார்ந்தவன் கந்தன் என்கின்ற கந்தசாமி. வயது 41. தற்போது கோவை சாலை, மொச்சக்கொட்டாம்பாளையத்தில் வசித்து வருகிறான். இவன் மீது கஞ்சா வழக்குகள் வெங்கமேடு, கரூர் மாநகர காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. போலீசார் தேடி வரும் நிலையில் தலைமறைவாக இருந்து வந்துள்ளான்.

நேற்று காலை ஆண்டான்கோவில், பெரியார் வளைவு அருகில் லாரியில் கந்தனும் அவனது கூட்டாளிகளும் இருப்பதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கரூர் மாநகர போலீசாருடன் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து மொத்தமாக லாரியில் எடுத்து வந்து ஆண்டான்கோவில் பெரியார் வளைவு அருகில் லாரியை நிறுத்தி பொட்டலம் பொட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து கந்தன் என்கின்ற கந்தசாமி, அவரது நண்பர் தேனி மாவட்டத்தை சார்ந்த ரூபன்ராஜ், சென்ராயன், அவரது அக்கா கஸ்தூரி, மதுரை மாவட்டத்தை சார்ந்த கவாஸ்கர், ஜீவானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, ஒரு லாரி மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரபல கஞ்சா வியாபாரி கந்தன் அவரது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 685

    0

    0