அசல் செலுத்திய பிறகும் மூதாட்டியிடம் கூடுதல் வட்டி கேட்டு தாக்குதல் … கந்துவட்டிக்காரரை கைது செய்து சிறையில் அடைப்பு
Author: Babu Lakshmanan29 June 2022, 4:58 pm
கரூரில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் கட்டிய பிறகும், கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டி, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுசீலா (67). சுசிலாவின் ஒரே மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 50) என்பவரிடமிருந்து 10% வட்டிக்கு ரூ.10,000/- கடனாக பெற்றுள்ளார்.
வாங்கிய கடனுக்காக மூதாட்டி சுசீலா ரூ.20,000/- தொகையை சரியாக வட்டியுடன் சேர்த்து திருப்பி அளித்துள்ளார்.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு செல்வகுமார் மூதாட்டி சுசீலா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கூடுதல் தொகையாக ரூ.10,000/- கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மூதாட்டி சுசீலா அளித்த புகாரின் பேரில் கந்து வட்டி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செல்வகுமார் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.