பதுங்குக்குழியில் பசியோடு இருக்கிறான் : உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு…!!
Author: Babu Lakshmanan25 February 2022, 2:16 pm
உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
உக்ரைனில் தற்போது போர் மூண்டுள்ள நிலையில், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்ற பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக மாணவர்களை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், உக்ரைனில் இருக்கும் தமிழர்களை மீட்பதற்காகவும், அவர்களின் தரவுகளை சேகரிப்பதற்காகவும் சென்னையில் தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த திம்மாச்சிபுரத்தை சார்ந்த சின்னதுரை மகன் சூர்யா, 3ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் கல்வி பயின்று வருவதாகவும், காந்திகிராமத்தை சார்ந்த தங்கவேல் மகன் தரன் 3ம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வருவதாகவும், பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சார்ந்த ஆண்டனி கேப்ரியேல் மகள் ஸ்ரீநிதி, மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டு தரக் கோரி மனு அளித்தனர்.
தற்போது போர் நடந்து வரும் நிலையில் ஏ.டி.எம் பணம் எடுக்க முடியவில்லை என்றும், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், 2 நாட்களாக மெட்ரோ சுரங்க பாதைகளிலும், கல்லூரி விடுதிகளிலும் தங்கி இருப்பதாகவும் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.