‘போதிய நிதி கொடுக்காததால் மக்கள் பணியாற்ற முடியல’… அரசு நிகழ்ச்சியில் கரூர் திட்டக்குழு தலைவர் புலம்பல்..!!
Author: Babu Lakshmanan29 June 2023, 1:48 pm
கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை என கரூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் திட்டக்குழு தலைவர் புலம்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் தலைமையில் ஊரகப் பகுதிகளில் ஆறு பேரும், நகர்ப்புறங்களில் நான்கு பேர் என 11 உறுப்பினர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்தபின் பேசிய திட்ட குழு தலைவர் கண்ணதாசன், கரூர் மாவட்ட நிர்வாகம் ஊரகப் பகுதிகளில் மக்கள் திட்டங்களை செயல்படுத்த கட்சி பாகுபாடு பார்க்காமல் நிதி ஒதுக்க வேண்டும். டெண்டர்களை வெளியிட வேண்டும். ராஜ்ய சபா உறுப்பினர் நிதி வழங்கப்பட்டும், பணி ஆணையை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்றும் புலம்பினார்.
அதனைத் தொடர்ந்து, அவரிடம் பேசிய திட்ட இயக்குனர் வாணீஸ்வரி, மாவட்ட நிர்வாகம் போதிய நிதி ஆதாரங்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இருந்தாலும் தங்கள் கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.