சாலையில் தூக்கிவீசப்பட்ட ஆர்டிஓ விண்ணப்பங்கள்… அதிகாரிகளின் அலட்சியமா..? போலீசார் விசாரணை…!!
Author: Babu Lakshmanan13 May 2022, 10:38 am
கரூர் அருகே சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் விண்ணப்ப படிவங்களுடன் கிடந்த காலாவதியான ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகளை மீட்ட போலீசார், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புலியூரை அடுத்து உள்ளது உப்பிடமங்களம். அந்த கிராமத்தில் சுடுகாட்டுப் பகுதியில் சாக்கு மூட்டை 2 நாட்களாக கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி கிராம மக்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்துள்ளனர். அதில் காலாவதியான ஓட்டுநர் உரிம அட்டைகள், அதற்கான விண்ணப்ப படிவம் போட்டோக்கள் ஒட்டப்பட்டு, ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் என முத்திரை வைக்கப்பட்டிருந்ததுடன் கிடந்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையில் நூற்றுக் கணக்கான ராமநாதபுரத்தை சார்ந்த ஓட்டுநர் உரிமம் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. மேலும், அதற்குரிய விண்ணப்பப் படிவங்கள் விண்ணப்பித்தவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
இதனையடுத்து அவற்றை விசாரணைக்காக வெள்ளியணை காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகள் சாலையோரத்தில் சாக்கு மூட்டையில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.