கோவில் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து… ஒரு நபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி நள்ளிரவு வரை பொதுமக்கள் போராட்டம்

Author: Babu Lakshmanan
15 March 2022, 12:51 pm

கரூர் : கோவில் விவகாரத்தில் ஒரு நபருக்கு மட்டுமே போலீசார் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் நள்ளிரவில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை கிராமத்திற்குட்பட்ட வடக்குமேட்டுப்பட்டி பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மல்லையன் ஆலயத்தில் வருடா வருடம் கோயில் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கமான நிலையில், கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்த திருவிழாவானது, மல்லையன் நாயக்கர் என்கின்ற பெருமாள் என்பவர் மட்டும் நடத்துவதாக கூறி, வாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்று பிறகு, அவரே மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி வழக்கு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், தனிப்பட்ட ஒருநபருக்காக மட்டும் மாடு மாலை கும்பிடும் நிகழ்ச்சி நட்த்த முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்ததோடு, அங்கு வசிக்கும் 120 குடும்பங்களுக்கு மட்டும் தான் இந்த கோயிலும், கோயில் வழிபாட்டு முறையும் சொந்தம் என்றும் கூறி வழக்கினை முடித்து வைத்தது.

இதனையடுத்து, கடந்த 11 ம் தேதி மீண்டும் இதே காரணத்தினை வைத்து கொண்டு அந்த தனிப்பட்ட நபர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த வருடமே, இதே வழக்கு 120 குடும்பங்களுக்கு மட்டுமே உரிமை என்று கூறி, தள்ளுபடி செய்ததை ஞாபகப்படுத்தி, இந்த வழக்கினையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும்படி வெள்ளியணை காவல்நிலையத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே சுமார் 120 குடும்ப மக்கள் காத்திருந்தனர். ஆனால், எந்தவித முயற்சியும் எடுக்காத நிலையில், அந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே, காவல்துறையும், வருவாய்த்துறையும் துணை போவதாக கூறி, இரவு வரை அந்த 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரூர் தாலுக்கா அலுவலக வாயிற்படியிலேயே காத்திருந்தனர்.

ஆனால், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரோ அந்த உயர்நீதிமன்ற உத்திரவினை மதிக்காமல், அந்த தனிப்பட்ட அதே சமுதாய மக்களை சார்ந்தவருக்கு மட்டுமே ஆதரவாக இருந்ததையடுத்து, போராட்டம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், தாந்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.ஆர் என்கின்ற எம்.ரகுநாதன் மற்றும் முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.ராமசாமி ஆகியோர் உடனே தாலுக்கா அலுவலகம் முன்பு திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நீதிகிடைக்கும் வரை கைது செய்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு உரிமையான இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவினை எப்படியும் நடத்தியே ஆக வேண்டுமென்று கூறி, சுமார் இரவு 10.10 மணிவரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வெள்ளியணை பஞ்சாயத்து தலைவரும், திமுக நிர்வாகியுமான சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் எம்.ரகுநாதன், ஆர்.ராமசாமி ஆகியோர் ஒன்றிணைந்து, கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள், சென்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவில் விவகாரத்தில் காவல்நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கட்சி வேஷ்டி மற்றும் கரைவேஷ்டிகள் பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!