‘சல்லியே போடல… கட்டி 4 நாளுதான் ஆச்சு’; தரமற்ற சாக்கடை கால்வாய்… கரூரில் மீண்டும் அதிகாரிகள் அலட்சியம்..!!
Author: Babu Lakshmanan16 August 2022, 5:44 pm
கரூர் மாநகராட்சியில் சாக்கடை கால்வாய் கட்டுவதில் குளறுபடி நீடித்த நிலையில், இன்று அதே சாக்கடை கால்வாய் தரமற்ற நிலையில் கட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் உள்ள 1வது வார்டில் சாக்கடை கழிவுநீருடன் ஜல்லி சிமெண்ட் கலவைகளை கொட்டி, வேலூரை தொடர்ந்து கரூரில் விஞ்ஞான முறையில் ஒப்பந்ததாரர் ஒருவர் வாயடைக்க வைத்தார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களுக்கும் திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் இன்று, அதே கரூர் மாநகராட்சியில் எஸ்.வெள்ளாளப்பட்டி வடக்குத்தெருவில் 4 நாட்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் வசதி தரமற்ற முறையில் இருந்துள்ளது.
இந்த புகாரையடுத்து, அதிமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ், அதிமுக நிர்வாகியும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருமான தானேஷ் (எ) முத்துக்குமார் பார்வையிட்டனர். அப்போது, மழைநீர் வடிகாலில் சல்லியே பயன்படுத்தப்படவில்லை என்றும், தரமில்லாத கான்கிரீட்டுகளை கைகளை பெயர்த்து எடுத்தாலே, சல்லி சல்லியாக நொறுங்கி வருவதாக கூறுகின்றனர்.
மேலும், அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்காக 40 சதவிகிதம் அரசியல் பிரமுகர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கமிஷன் தருவதாகவும், எனவே இதுபோன்று தரமற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்வதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.