மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு ; தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.. மருத்துவமனை முற்றுகை
Author: Babu Lakshmanan8 November 2022, 8:29 am
கரூரில் தவறான சிகிச்சை அளித்ததால் பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மணவாடி ஊராட்சி கல்லுமடை காலனி சார்ந்த ஜோதி (27). கணவர் பெயர் முகேஷ்குமார். ஜோதிக்கு உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக நேற்று மாலை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவர்கள் ஜோதியை பரிசோதித்தனர் வழியில் இறந்துள்ளார் என்று தெரிவித்ததால், இறந்த பெண்ணின் உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மயக்க மருந்தின் அளவு அதிகப்படியான செலுத்தியதால் இறந்துள்ளார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஜோதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.