கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை… பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 3 பேருக்கு 15 நாட்கள் சிறை ; நீதிமன்றம் உத்தரவு
Author: Babu Lakshmanan23 January 2024, 9:07 pm
கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கரூர் கிளைச் சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி – பாத்திமா பீவி தம்பதி. ஜெய்லானி டீ மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பாத்திமா பீவி வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்திற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க 33000 ரூபாய்க்கு கடனாக வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், மூன்று மாதம் சரியாக தவணை கட்டிய நிலையில், தொடர்ந்து தவணை கட்டாமல் அந்த குடும்பம் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் கடன் வாங்கி கொடுத்த பாத்திமாபீவி-யை பைனான்ஸ் நிறுவனத்திற்கு அழைத்து தகாத வார்த்தையால் திட்டியும், அதிக வட்டி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பாத்திமா பீவி கடந்த 20ஆம் தேதி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் மருத்துவமனையில் சேர்த்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் SDPI உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பைனான்ஸ் நிறுவனம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தகாத வார்த்தையிலும், மிரட்டல் தோணியில் பேசிய பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாத்திமா பீவி உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக காத்திருக்கின்றனர்.
மேலும், இறப்பதற்கு முன்பு பாத்திமா பீவி பேசிய வீடியோவும், கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது. இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், கார்த்தி, நாகராஜ் ஆகிய மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி அம்பிகா முன்பு ஆச்சரியப்படுத்தப்பட்டு பின்னர் 15 நாள் கரூர் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.