ஜாமீன் கோரி தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட கஸ்தூரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: கடந்த நவம்பர் 3ஆம் தேதி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பிராமணர்களுக்காக புதிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள், குறிப்பாக பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிரான கருத்துகளும் கிளம்ப, நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில், 4 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிக்கச் சென்றபோது, அங்கு வீடு பூட்டப்பட்டு கிடந்ததால், போலீசார் வீட்டின் சுவற்றில் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர்.
இதனிடையே, நாயுடு மகாஜன சங்கம் சார்பில், மதுரை திருநகர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, கஸ்தூரி தலைமறைவனார்.
இதனால் அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் இருக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் தங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர், அவர் எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் ,மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கட்டைப்பையில் குழந்தையின் சடலம்.. அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவலம்
பின்னர், பெண் சிறைக்கைதிகள் இருக்கும் அறையில் கஸ்தூரி அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால், அங்கு அவர் நேற்று வழங்கப்பட்ட ஞாயிறு உணவை உட்கொள்ளவில்லை என்றும், சரியாக இரவில் தூங்கவில்லை என்றும், மேலும் இன்றும் உணவை சரியாக எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜாமீன் கோரி, கஸ்தூரியின் வழக்கறிஞர் பிரபாகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (நவ.20) விசாரணைக்கு வர உள்ளது. அதேநேரம், சிறையில் முதல் வகுப்பு வசதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.