காவேரி மருத்துவமனை TO புழல்… சிறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி!!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜூலை 2023, 9:16 மணி
சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இதனிடையே, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும் அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என்று உத்தரவிட்டது. மேலும், மருத்துவமனை சிகிச்சைக்கு பின் அவரை வரும் 26-ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விரைவில் விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0