உலகிலேயே முதல்முறையாக கேசிபி இன்பரா நிறுவனம் உருவாக்கிய ‘தமிழ் எழுத்து திருவள்ளுவர் சிலை’ ; கோவையில் விரைவில் திறப்பு..!!
Author: Babu Lakshmanan10 June 2023, 10:15 am
கோவை மாநகரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகளை கேசிபி இன்பரா லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குறிச்சி குளம் சுமார் 52 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குளத்தின் கரையில் கேசிபி இன்பரா நிறுவனம் தமிழ் எழுத்துக்களால் ஆன பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை உருவாக்கி உள்ளது. விரைவில் இந்த சிலை தமிழக அரசு நிர்வாகத்தால் திறக்கப்பட உள்ளது.
திருவள்ளூவர் எழுதிய 1330 திருக்குறளை போற்றும் விதமாக 1330 தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 15 அடி அகலம், 25 அடி உயரம், 20 அடி நீளம் என குளக்கரையில் மக்கள் பார்த்து ரசிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. சிலையில் 12 உயிர் எழுத்து, 18 மெய் எழுத்து, 216 உயிர்மெய் எழுத்து, ஒரு ஆயுத எழுத்து என மொத்தம் உள்ள 247 தமிழ் எழுத்துக்களுடன் சேர்த்து தமிழி எழுத்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இது தவிர நான்கு ரகசிய வார்த்தைகளும் இந்த சிலைக்குள் தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஹைலைட் ஆக அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கேசிபி இன்பரா லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் கே. சந்திர பிரகாஷ் கூறியதாவது: இந்தியா உட்பட உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவருக்கு உலகிலேயே எங்குமே சிலை அமைக்கப்படவில்லை. கோவை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் புதிய சிந்தனையாக இந்த திருவள்ளுவர் சிலை குறிச்சி குளக்கரையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கொரியா நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் சிலை அந்த நாட்டின் தாய் மொழியில் அமைக்கப்பட்டிருந்தது. இதை போன்று கோவையில் தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவருக்கு சிலை உருவாக்கப்பட்டது.
வட்டெழுத்து என்பது கி.பி. 3ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 10ம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். அதேபோல, சிற்பத்தின் வலது மார்பக பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் எழுத்துக்கள் தமிழி அல்லது தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டுள்ளது. தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலுருந்து தோன்றியது குறிப்பிடத்தக்கது
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் தரமான ஸ்டீல் மூலமாக பல்வேறு வடிவங்களில் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து சூரிய கதிர்கள் சிலை மீது பட்டால் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு சிலை உருவாக்கும் பல்வேறு நிபுணத்துவம் பெற்ற இன்பரா ஸ்டிரக்சர் இன்ஜினியர்கள் பயன்படுத்தப்பட்டனர். தமிழ் எழுத்துக்களால் ஆன இந்த சிலை கோவைக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் ஒரு பிரத்யேகமான அடையாளமாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் வரலாற்றில் தமிழ் எழுத்துக்களுடன் திருவள்ளுவர் சிற்பம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்,” என்றார்.