கோவை மக்களின் குடிநீருக்கு ஆபத்து..? சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு திட்டம்.. தடுத்து நிறுத்துமா தமிழக அரசு..?
Author: Babu Lakshmanan21 April 2023, 9:08 am
கோவை ; சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டுள்ள நிலையில், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிற சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிகடவு – சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில் கேரளா அரசு ஐந்து அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றது. மேலும், இரண்டு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருக்கின்றார்கள். ஏற்கனவே, சிறுவாணி அணையில் மழை காலங்களில் முழு கொள்ளளவை 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருகிறது.
கோடை காலத்தில் வரக்கூடிய தண்ணீரையும் சிறுவாணி அணைக்கு வராமல் தற்போது தடுப்பணைகளை கட்டி வருகிறது. சிறுவாணி ஆறும், பவானி ஆறும் காவிரி மேலாண்மை வாரியத்தில் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள். ஆனால், கேரளா அரசு காவிரி மேலாண்மை வாரியத்திலும் அனுமதி பெறாமல் சிறுவாணியில் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இந்த தடுப்பணைகளை தடுக்காவிட்டால் கோவை மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
ஏற்கனவே, பவானி ஆற்றிலும் இதுபோல தடுப்பணைகளை கட்டியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு சிறுவாணியில் கட்டப்படும் தடுப்பணைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். கேரள அரசானது இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், அனைத்து கட்சி, இயக்கங்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறோம், என தெரிவித்துள்ளார்.