அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்… உதவி செய்வது போல நடித்த பெண் யார்… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 9:10 am
Quick Share

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.

கர்ப்பிணியான கமலினி கடந்த 22ந் தேதி பிரசவத்திற்காக, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் வேலைக்கு சென்று விட்டு மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாக கூறி வாங்கி சென்றுள்ளார் என அர்ஜூன்குமாரிடம் கமலினி தெரிவித்துள்ளார்.

அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை. இதனால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன்குமார் பார்த்த போது அங்கு உமாவும் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன்குமார் இது குறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்தி சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டனர்.

அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், விழுப்புரத்தில் அந்த எண் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர்கள் தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 25ந் தேதி ஏற்கனவே ஒரு குழந்தை கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. தற்போது அந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திலேயே மீண்டும் ஒரு குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 429

    0

    0