அரிசி ஆலை அதிபர் கடத்தல்.. கட்டிப் போட்டு தாக்கி பணம், செல்போன் கொள்ளை.. கோவையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 10:49 am

கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவரை ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். அப்போது வீட்டு முன்பு நின்று இருந்த 2 பேர் நாங்கள் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை யாரிடமும் சொல்லக் கூடாது என ஜாபர் சாதிக்கை மிரட்டினர்.

அதே நேரத்தில் மேலும் 5 பேர் அங்கு காரில் வந்தனர். அவர்கள் ஜாபர் சாதிக்கை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பின்னர் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் காரை நிறுத்தி ஜாபர் சாதிக்கை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ. 23 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து, அரிசி கடத்தல் சம்பந்தமாக வெளியே சொன்னால் தொலைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து ஜாபர் சாதிக் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜாபர் சாதிக்கை கடத்தி தாக்கியது, கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (37), கோவைப்புதூரை சேர்ந்த தவ்பிக் (39), கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமத் அசாருதீன் (35) உள்ளிட்ட 7 பேர் என்பது தெரியவந்தது.

3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் இதில் தொடர்புடைய ஜியா, ஜாகீர், அன்வர், அஜீஸ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!