விசாரணை என்ற பெயரில் நிர்வாணத் தாக்குதல்.. 2 கிட்னியும் செயலிழப்பு.. கோவையில் பரபரப்பு!
Author: Hariharasudhan5 December 2024, 3:25 pm
கோவையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரத்தில், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அந்த மனுவில், “கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21).
இவர் அரசு மருத்துவனை ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த நவம்பர் 22ஆம் தேதி, மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளரான குரு சந்திர வடிவேல், உமருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காவல் நிலையத்துக்கு வரச் சொல்லியுள்ளார். இதன் பேரில், உமர் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு உமரை தனி அறையில் அடைத்து, ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, குரு சந்திர வடிவேல் மற்றும் சில காவல் அதிகாரிகள் பைப்பில் ஈரத் துணியைச் சுற்றி சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர், வீடு திரும்பியதும் உமருக்கு சிறுநீரில் ரத்தம் கசிய ஆரம்பித்துள்ளது.
உடனடியாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் பலமான உள் காயங்கள் உள்ளதாகவும், நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாயாசம் கிண்டுகிற ஒருவர்.. பொட்டலம் கட்ட முடியாது.. விஜய் மீது வன்னி அரசு சரமாரி தாக்கு!
பின்னர் இது குறித்து தெளபீக் உமரின் உறவினர்கள், காவல் நிலையம் சென்று கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. அதேநேரம், தௌபீக் உமர் மீது எந்த வழக்குகளும் இல்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், உரிய சம்மன் இல்லாமல் சட்ட விரோதமாக அவரை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் வரச்சொல்லி நிர்வாணப்படுத்தி, சிறுநீரகம் செயலிழக்கும் அளவுக்கு சரமாரியாக அடித்துள்ளனர்.
எனவே, உதவி காவல் ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் மற்றும் உமரிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் தகாத வார்த்தைகளில் பேசிக் காயப்படுத்திய காவல் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் குரு சுந்தர வடிவேல் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக எஸ்பி கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும், துறை ரீதியாக விசாரணை நடத்தப்படுவதாகவும், சிகிச்சையில் உள்ள உமர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த ஆண்டு, ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த 16 வயது இளைஞரை உமர் அடித்ததாகவும், அது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அது குறித்து விசாரிக்கவே உமர் காவல் நிலையம் அழைக்கப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.