உதயநிதி மகன் இன்பநிதிக்கும் வாழ்க சொல்வோம்.. வாரிசு அரசியல் என மிரட்டிவிட முடியாது ; அமைச்சர் கேஎன் நேரு பரபர பேச்சு
Author: Babu Lakshmanan17 December 2022, 7:49 pm
உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் அரசியலுக்கு வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம் என்றும், வாரிசு அரசியல் என எங்களை யாரும் மிரட்டிவிட முடியாது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என். நேரு கலந்துக்கொண்டு விழா பேருரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :- 1986 முதல் 2022 வரை 32 ஆண்டு காலத்தில் எனக்காக முதல் முறையாக போடப்பட்டுள்ள கூட்டம் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். சொத்துவரி, மின்சாரக் கட்டணம் உயர்வு உள்ளிட்டவை ஒவ்வொரு ஆட்சியிலும் நிர்வாக சீர்திருத்தம், விலை உயர்வின்போது அரசுக்கு செலவு ஈடுகட்டும் வகையில் உயர்த்துவது இயல்பான செயல்.
என் மீது 9 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டது. பல நிர்வாகிகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் அதிமுக நிர்வாகிகள் யார் மீதும் வழக்கு போடவில்லை. ஆனால், உங்கள் மீது வழக்குகள் போடாததால்தான் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகம் பேசும் நிலையில், இனிவரும் காலங்களில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணுகிறேன்.
எடப்பாடி பழனிசாமி யாரை கண்டும் பயப்படமாட்டோம் என்று கூறுகிறார். சேலம் எம்ஜிஆர், ஜெயலலிதா கோட்டையாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் தளபதி கோட்டையாக மாறும் என்றார். எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. சேலத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். அதிமுக கோட்டை என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலத்தில் திமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில், வருங்காலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினராக மாறுவார்கள். அனைத்திலும் திமுக வெற்றிபெறும்.
திமுக ஜெயலலிதா, எம்ஜிஆரை பார்த்து உள்ளது. அவர்களையும் வெற்றி பெற்றுள்ளோம். தற்போது திமுக இறுதிவரை வெற்றிபெறும் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் தான்.
அதிமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடியுள்ளதா? யார் ஆட்சியில் தேனாறும், பாலாறும் ஓட முடியும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்களிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம். வாரிசு அரசியல் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள். உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது.
திமுக கழகத் தொண்டர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள். திமுகவில் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்ற கட்சி. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, 3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். நிதிசுமையை ஏற்றி வைத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டீர்களா என்று பலதிட்டங்கள் குறித்து கேட்கிறார்கள். நிச்சயம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆனால் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் பேப்பராகவும், வெத்துவேட்டாகவும் மட்டுமே இருந்தது.
மேலும் அவசர அவசரமாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதால் சேலத்தில் அதிமுக 10 சீட்டுகளை வெற்றி பெற்றார்கள். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி கொடுப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார், எனக் கூறினார்.