வெறும் ரூ.150 தான்… மொத்த கொடைக்கானலையும் சுற்றிப்பார்த்து விடலாம் ; வெளியான அறிவிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!
Author: Babu Lakshmanan20 April 2023, 10:53 am
திண்டுக்கல் ; கொடைக்கானலை இனி 150 ரூபாயில் சுற்றிப் பார்க்கலாம் என்று போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலம் ஆகும். ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து, இங்க இருக்கக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு பெரும்பாலும் முக்கிய தேவையாக இருப்பது அறைகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தான் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தனியார் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் முக்கியமாக செல்லக்கூடிய சுற்றுலா தளங்களான மோயர் பாய்ண்ட் , குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட 12 இடங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சுற்றுலா பேருந்தை இயக்க ஆரம்பித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படக்கூடிய இந்த பேருந்து கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி அப்பர் லேக் வியூ , மோர் பாயிண்ட், பைன் மர காடுகள், குணா குகை, தூண்பாறை , பசுமை பள்ளத்தாக்கு, கோல்ஃப் மைதானம், 500 வருடமரம் , கோக்கர் வாக், பிரையன்ட் பூங்கா வழியாக ஏரியில் சுற்றுலாப் பயணிகளை இறக்கி விடுகிறது.
12 சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகைக்கேற்றும், தேவைக்கேற்பையும் பேருந்து இயக்கப்பட்டு வருவதாக கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை காண்பதற்கு தமிழக அரசு சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும், பொது போக்குவரத்தை நாட வேண்டும் என்ற ஒரு எண்ணமும் எழுந்துள்ளது. தற்போது, கோடை காலத்திற்கு மட்டும் இந்த வசதி உள்ளதாக கூறப்படுகிறது.