கொடைக்கானலில் மீண்டும் தலைதூக்கும் சர்ச்சை: சீரழியும் குடும்பங்கள்: இளைஞர்களை குறிவைக்கும் அடிமை வாழ்வு…..!!
Author: Sudha18 August 2024, 2:27 pm
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும்.கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்கு மட்டுமல்லாது கொடைக்கானலில் கிடைக்கும் போதைப்பொருட்களை ருசிப்பதற்காகவும் கொடைக்கானலை நோக்கி அதிக அளவில் இளைஞர்கள் வருவது தொடர்கதை ஆகிறது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர படக்கூடிய போதை காளான் ருசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வரக்கூடிய சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் போதை காளான் விற்பவர்களை கொடைக்கானல் போலீசார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் போதை காளான் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மேல்மலை கிராம பகுதிகளில் போதை காளான் விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. இதை அடுத்து போதை காளான் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு அதிரடி சோதனையில் கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி தலைமையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானலில் உள்ள தங்கும் வகுதிகள் ,தனியார் காட்டேஜ்கள், டென்ட் ஹவுஸ்கள், உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கொடைக்கானலில் போதை காளான் விற்ற 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல போதை காளான் உட்கொள்வதற்காக போதை காளான் கேட்டு வந்த கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10 சுற்றுலா பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றி கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். கடந்த சில தினங்களாக விடுதிகள் மற்றும் வாகன சோதனை செய்யப்பட்டது. போதை காளான் விற்பது சம்பந்தமான சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு இது பற்றி வீடியோ வெளியிடும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும். போதை காளான் அதிகமாக விளையும் வனப்பகுதிகள் கண்டறியப்பட்டு வனத்துறையினர் உடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போதை காளான் குறித்து தகவல்கள் பரிமாற நபர்கள் விற்கும் நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பக்கூடிய தகவல்கள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.நகர் பகுதிகளில் திடீர் சோதனையால் கொடைக்கானல் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.